லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘ இந்தியன் 2 ‘. 1996ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ இந்தியன் ‘ படத்தின் இரண்டாம் பாகம்.
நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல், இதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள். இதைக் கண்டு களையெடுக்க போராடும் நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்). சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக வீடியோக்கள் எடுத்து, தங்களது யூடியூப் சேனலில் பதிவேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் சித்தார்த்தின் பார்க்கிங் டாக்ஸ் குழு. லஞ்சம் மற்றும் ஊழல்களால் ஏழைகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதற்கு ஒரே வழி சேனாதிபதி என்கிற இந்தியன் தாத்தா ( கமல் ஹாசன்) மீண்டும் வர வேண்டும். இந்தியன் தாத்தா வந்தாரா இல்லையா என்பது இந்தப் பாகம்?
வெறும் நடையிலேயே சோகத்தையும், இயலாமையையும் காட்ட முடியும் என்பதை நிரூபித்தக் கலைஞர்கள் இருவர். ஒருவர் சிவாஜி, மற்றொருவர் கமல். இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு அருமை எனச் சொன்னால் மட்டும் போதாது. கிராண்ட் எனச் சொல்லலாம். அப்டேட் லெவல் பிராஸ்தடிக் மேக்கப்பைக் காட்டிலும் பழைய இந்தியன் தாத்தா கெட்டப்பே இயல்பாக இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அதீத மேக்கப் கமலின் உணர்வுகளை வெளியேற விடாமல் தடுக்கின்றன.
சித்தார்த்& கோ காட்சிகள் நிச்சயம் யூடியூபர்களுக்கு நல்ல ஐடியா மூட்டை . ஆனால் அரசியல் பிரச்னைகள் பேசும் போது தெரியுது ஓட்டை. பல காட்சிகளில் சித்தார்த் நடிப்பு நன்றாகவே பயன்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் ஓவர் டோசைக் குறைத்திருக்கலாம். சித்தார்த் , சமுத்திரகனி கதாபாத்திரம் தவிர மற்றவை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். படம் முழுக்க ஜெயராம் காளிதாஸ், இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள், வருகிறார்கள் போகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, ரேணுகா, பாபி சிம்ஹா, போன்றோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
மூன்று பேர் கூட்டணி இணைந்து இன்னும் எவ்வளவோ நல்ல வசனங்களை எழுதி இருக்கலாம். ஆனால் வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளை நம்பியே படம் முழுக்க வசனங்கள் எழுதி இருப்பார்களோ எனத் தோன்றுகிறது. மக்களின் நலத்திட்டங்கள் வேறு அதே சமயம் இலவசங்கள் வேறு. இன்றும் எத்தனையோ கிராமங்களில் செய்த நலத்திட்டங்களால் தான் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று கேஸ் ஸ்டவ்வில் சமைத்து வருகிறார்கள். புகைப்படம் கூட தெரியாத பல குக் கிராமங்களில் கூட இன்று கலர் டிவி ஓடுகிறது எனில் அதற்கும் அரசின் நலத்திட்டங்கள் தான் காரணம். இதையெல்லாம் இலவசங்கள் என கிண்டலாக சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
கேலண்டர் , கம் பேக் இந்தியன் பாடல்கள் இயக்குனர் ஷங்கரின் வழக்கமான விஷுவல் ட்ரீட் . அதனுடன் சண்டைக் காட்சிகளும் இணைந்து ரவிவர்மாவின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்து வைக்கின்றன. ஆனால் அத்தனையும் ஏனோ மனதில் இடம்பெற மறுக்கின்றன. அனிரூத்தின் இசையில் பின்னணி கலவை இன்னும் மெனக்கெட்டு கொடுத்திருக்கலாம். ஏ. ஆர். ரகுமானின் பழைய இந்தியன் பின்னணி இசை ஆங்காங்கே சேர்த்திருப்பது படத்திற்கு பலம்.
நவீன ஏஐ தொழில்நுட்பத்தில் விவேக் மற்றும் நெடுமுடி வேணு கேரக்டர்கள் மிக அற்புதமாக காட்சிகளில் வசனங்கள் பேசி நடிப்பது இந்திய சினிமாவின் இன்னொரு விதமான வளர்ச்சியை காட்டுகிறது. மேலும் விவேக் கேரக்டர் ஒரு சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது.
படத்தில் லாஜிக் கிலோ என்ன விலை என கேட்க தோன்றுகிறது. குறிப்பாக டிவி செய்தியை பார்த்துவிட்டு மக்கள் வெகுண்டெழுவதெல்லாம் நடக்குமா என்னும் கேள்வியை எழுகிறது. எனில் நாட்டில் நடக்கும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு எப்போதோ மக்கள் ஒன்றிணைந்து இருப்பார்களே. இது ஜனநாயக நாட்டின் மீது தவறான அடையாளத்தை ஒட்டுவது போல் உள்ளது.
இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி – சித்தார்த் காட்சிகள் சென்டிமென்டாக சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. பாபி சிம்ஹாவின் கேரக்டருக்காகவே காட்சி அமைத்தது போல் சேசிங் ரன்னிங் என கிளைமாக்ஸ் சலிப்பை உண்டாக்குகிறது. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சற்று கண்டிப்பை காட்டி இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இந்தியன் 2 படம் முடிவில் வரும் இந்தியன் 3 படத்தின் எண்ட் கிரெடிட் காட்சிகளை காணும் பொழுது இந்த பாகம் வெறும் டிரைலர் என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இந்தியன் 3 படத்திற்கான முழுமையான விளம்பரமாக படுகிறது இந்த இந்தியன் 2.