சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகியோர், ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் சமூக அவலங்களை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுகின்றனர். ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படும் அவர்கள், மக்களைத் திருத்த மீண்டும் இந்தியன் தாத்தா வரவேண்டும் என்று, சமூக வலைத்தளத்தில் ‘கம் பேக் இந்தியன்’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்கின்றனர்.
தாய்பெய் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு வரும் 106 வயது இந்தியன் தாத்தா சேனாபதி (கமல்ஹாசன்), ‘நாட்டைத் திருத்துவதற்கு முன்னால் உங்கள் வீட்டைத் திருத்துங்கள்’ என்று பேஸ்புக் லைவ்வில் சொல்கிறார். பிறகு இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் ஊழலில் திளைத்த ஒவ்வொருவரையும் வர்மக்கலை மூலம் கொல்கிறார். நெடுமுடி வேணுவால் கைது செய்ய முடியாத சேனாபதியை, அவரது மகன் பாபி சிம்ஹா கைது செய்ய முயல்கிறார். அது முடிந்ததா? சேனாபதி சொல்படி நடந்த சித்தார்த் கோஷ்டி, இறுதியில் அவருக்கே எதிராக திரும்பியது ஏன் என்பது மீதி கதை.
1996ல் வெளியான ‘இந்தியன்’ படத்தின் 2ம் பாகமாக வந்துள்ள இதில், இந்தியா முழுவதும் கதைக்களம் விரிகிறது. ஊழல் பேர்வழிகளை வியூகம் வகுத்து சேனாபதி கொல்லும் காட்சி, நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது. இன்றைய நிலையில் இந்தியன் தாத்தா இருந்தால் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படுகிறது. ஷங்கர் படங்களுக்கே உரிய பிரமாண்டம் அசர வைக்கிறது. சேனாபதியாக வாழ்ந்து, பல்வேறு தோற்றங்களில் வந்து கெத்து காட்டி, இளைய தலைமுறையை மிரட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.
புவியீர்ப்பு விசை குறைந்த விண்வெளியில் வாழ்வதற்கான பயிற்சி அரங்கில், அந்தரத்தில் மிதந்தபடி வில்லனைக் கொல்லும் காட்சியில் அவரது நடிப்பு அபாரம். தன்னை வரவேற்ற மக்களே இறுதியில் தன்மீது கல்லெறிந்து கொல்ல விரட்டுவதை அறிந்து கலங்குவதும், பாபி சிம்ஹாவிடம் இருந்து தப்பிக்கும் சேசிங் காட்சியில் பரபரப்பு ஏற்படுத்துவதுமாக, ‘இந்தியன் 3’ல் கமல்ஹாசன் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் தந்தை சமுத்திரக்கனியை சந்தேகப்பட்டு, அதற்காக அம்மாவை இழந்து தவிக்கும் சித்தார்த்துக்கு இது நல்ல அடையாளம் தரும் படம். அவரது தோழர்கள் ஜெகன், ரிஷி, தோழி பிரியா பவானி சங்கர் ஆகியோர், கொடுத்த வேலையை நன்கு செய்துள்ளனர். ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, குல்ஷன் குரோவர், ரேணுகா, தம்பி ராமய்யா, மாரிமுத்து, வினோத் சாகர் போன்றோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு வித்தியாசமான கெட்டப். நடிக்க வாய்ப்பு குறைவு.
ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்துக்கு பெரும்பலம். ஆர்ட் டைரக்டர் முத்துராஜின் தங்கத்திலான அரங்கு பிரமிக்க வைக்கிறது. கதைக்கேற்ப பாடல்கள் பயணித்துள்ளன. கதையோட்டம் சீராக அமைய அனிருத்தின் பின்னணி இசை உதவியுள்ளது. ‘முதலில் வீட்டைச் சுத்தப்படுத்தினால், பிறகு நாடு சுத்தமாகும்’ என்ற சோஷியல் மெசேஜை ஷங்கர் சொல்லியிருப்பது சிறப்பு. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.