சென்னை: டிஎஸ்எஸ் ஜெர்மனி பிலிம்ஸ் மற்றும் வி2 கிரியேஷன், நியூஜெர்சி என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ரத்தமாரே’. லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் தினேஷா ரவிச்சந்திரன். வசனம் ஹரிஷ் நாராயண், பொன். பார்த்திபன், டான் அசோக். ஒளிப்பதிவு சந்தோஷ் ரவிச்சந்திரன்.
இசை விபின். ஆர். படம் பற்றி இயக்குனர் தினேஷா ரவிச்சந்திரன் கூறும்போது, ‘அச்சம், மடம், பயிர்ப்பு என்ற மூன்று நிலைகளில், மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் சம்பவங்களை, அடர்த்தியான திரைக்கதையைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறோம். ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘ரத்தமாரே’. அந்த தலைப்பிற்காக மரியாதை நிமித்தமாக ரஜினி சாரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம்’ என்றார்.