சென்னை: ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா, நட்டி, சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா, விடிவி கணேஷ் நடித்துள்ள படம், ‘பிரதர்’. இது வரும் 31ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க, ராஜேஷ்.எம் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: ஜெயம் ரவி வழக்கறிஞராகவும், அவரது ஜோடியான பிரியங்கா அருள் மோகன் டாக்டராகவும் நடித்துள்ளனர்.
படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். பிரியங்கா அருள் மோகனுக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தாலும், பிறகு நன்கு பிக்அப் ஆகி தமிழில் டப்பிங் பேசி அசத்திவிட்டார். ஜெயம் ரவிக்கு அக்காவாக யாரை நடிக்க வைக்கலாம் என்று, என் உதவி இயக்குனர்களுக்கு போட்டி வைத்தேன். பிறகு அவர்கள் எழுதி கொண்டு வந்த எல்லா பெயரையும் படித்தேன். அவர்கள் குறிப்பிடாத நடிகையான பூமிகாவை மும்பைக்கு தேடிச்சென்று கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன்.
சிலர் குறிப்பிடுவது போல், ‘ஜெயம் ரவிக்கு அக்காவாக என்னை நடிக்க கேட்பதா?’ என்று பூமிகா என்னிடம் கோபப்பட்டார் என்று சொல்வது வதந்தி. முதலில் அவரிடம் ஜெயம் ரவியின் பெயரைச் சொல்லி ஓ.கே வாங்கிய பிறகே பூமிகாவிடம் கதை சொன்னேன். அவரும் முழு மனதுடன் சம்மதித்தார். எங்கேயும் தன் அக்காவை விட்டுக்கொடுக்காத தம்பியும், தம்பியை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத அக்காவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள். அந்தந்த கேரக்டரில் பூமிகாவும், ஜெயம் ரவியும் வாழ்ந்திருக்கின்றனர்.