ஆர்த்தர் பிளெக் செய்த கொலைகளுக்காக, நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். அவரது தரப்பு வழக்கறிஞர், ஆர்த்தருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது என்றும், அவருக்குள் இருக்கும் ஜோக்கர் ஸ்பிளிட் பெர்சனாலிட்டிதான் கொலைகளைச் செய்ததாகவும் வாதத்தை முன்வைக்கிறார். ஆர்த்தர் உண்மையிலேயே மனநலப் பிரச்னையால் கொலைகளைச் செய்தாரா அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க நடிக்கிறாரா என்ற கேள்விக்கு விடைதான் மீதி கதை. கடந்த 2019ல் வெளியான ‘ஜோக்கர்’ என்ற படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த பாகத்தில் 5 பேரைக் கொலை செய்த குற்றத்துக்காக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஆர்த்தர், ஆர்க்கம் ஸ்டேட் மருத்துவமனையில் ஹர்லீன் லீ என்ற லேடி காகாவை நேரில் சந்திக்கிறார். இருவருக்குமான காட்சிகள் ரொமான்டிக் சைக்கோ டிராமா கட்சிகளாக நகர்கின்றன. முழுக்க, முழுக்க நீதிமன்ற விசாரணை கதைக்களத்திலேயே படத்தைக் கொண்டு சென்றுள்ளார், இயக்குனர் டோட் பிலிப்ஸ். அதன் காரணமாகவே திரைக்கதை மெதுவாக நகரும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.
இப்படத்தின் மிகப்பெரிய பிரச்னை, திரைக்கதை. தொழில்நுட்ப அம்சங்கள், மேக்கிங், நடிப்பு என்று அனைத்து விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்திய படக்குழு, திரைக்கதையில் பல இடங்களில் பொறுமையைச் சோதித்து கொட்டாவி விட வைக்கிறது. முதல் பாகத்தில் இருந்த அழுத்தம், சுவாரஸ்யம் சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இப்படத்தை ஒரு பாகத்தோடு விட்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், ஒரு கல்ட் கிளாசிக் ‘ஜோக்கர்’ என்று போற்றப்பட்டு இருக்கும். தேவையின்றி 2ம் பாகத்தை எடுத்து, தவறு செய்துள்ளது வார்னர் பிரதர்ஸ் கம்பெனி.
