சென்னை: கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘தேவரா’ என்ற பான் இந்தியா படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூனியர் என்டிஆரிடம், ‘நேரடி தமிழ்ப் படத்தில் எப்போது நடிப்பீர்கள்?’ என்று கேட்டபோது, ‘தமிழில் பேசவும், நடிக்கவும் எனக்கு அதிக ஆசை இருக்கிறது.
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அப்படத்தை தமிழிலேயே உருவாக்க வேண்டும். பிறகு தெலுங்கு உள்பட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யலாம்’ என்று சொல்லியிருந்தார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம், ஜூனியர் என்டிஆர் கூறிய விஷயம் பற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வெற்றி மாறன், ‘ஏற்கனவே ஜூனியர் என்டிஆரை சந்தித்து, ஒரு கதையை விவாதித்தேன். தற்போது வெவ்வேறு படங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதற்கான பணிகள் முடிவடைந்தவுடன் நாங்கள் பணிபுரிவது பற்றி முடிவு செய்வோம்’ என்றார்.