சென்னை: கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அறிமுக டீசர் நேற்று வெளியானது. 1987ல் வெளியான ‘நாயகன்’ படத்தில்தான் மணிரத்னம், கமல்ஹாசன் முதல் முறையாக இணைந்து பணியாற்றினார்கள். 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்து பணியாற்ற உள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எட்டிங். சண்டை பயிற்சி அன்பறிவு.
கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்த நாள். இதை முன்னிட்டு இந்த படத்தின் அறிமுக டீசர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. இதில், ‘என் பேரு ரங்கநாயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினம்காரன். நான் பொறக்கும்போதே கிரிமினல்னு எழுதிட்டாங்க’ எனக் கூறி தன்னை தாக்க வருபவர்களை பதம் பார்க்கிறார் கமல்ஹாசன். பிறகு, ‘காள என்னை தேடி வந்தது இது முதல் முறை கிடையாது. கடைசி முறையும் இல்லை’ எனச் சொல்லி எதிரிகளை பதம் பார்க்கிறார். இந்த சிறு சண்டை காட்சியுடன் இந்த டீசர் முடிகிறது. படத்துக்கு ‘தக் லைஃப்’ (குண்டர் வாழ்க்கை) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா நடிக்கின்றனர். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.