சென்னை: ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணைகிறார் கமல்ஹாசன். சர்வதேச சினிமா உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக, கமல்ஹாசன் மற்றும் இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளனர். இவர்களுடன் அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜெர்மி ஸ்ட்ராங் போன்ற உலகப் பிரபலங்களும் இந்த கௌரவமிக்க அமைப்பில் இணைய அழைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 26 அன்று, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு, கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, அரியானா கிராண்டே, பிராண்டி கார்லைல், ஆண்ட்ரூ வாட், பிரான்ஃபோர்ட் மார்சாலிஸ், கோனன் ஓ’பிரையன், ஜிம்மி கிம்மெல் உட்பட மொத்தம் 534 தனிநபர்களை அதன் உறுப்பினர்களாக இணைய அழைத்துள்ளது.
அழைக்கப்பட்ட அனைவரும் உறுப்பினர்களாக இணைந்தால், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (எமரிடஸ் உட்பட) 11,120 ஆக உயரும். வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆக இருக்கும். இதன் மூலம் விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உறுப்பினர்களில் கமல்ஹாசனும் இடம்பெறுவார். ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக இதுவரை தமிழகத்தை சேர்ந்த எந்த நடிகரும் இயக்குனரும் இருந்ததில்லை. அந்த பெருமையை பெறும் முதல் தமிழ் நடிகர் கமல்ஹாசன் தான்.