சென்னை: கடந்த 2022 செப்டம்பரில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த பான் இந்தியா படமான ‘காந்தாரா’, மிகப்பெரிய வெற்றிபெற்று ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ‘காந்தாரா’ படத்தின் 2வது பாகமான ‘காந்தாரா: சாஃப்டர் 1’ படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புக்கு நடிகர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. யாரும் உயிரிழக்கவில்லை. பிறகு தொழில்நுட்பக்கலைஞர் கபில் என்பவர், கடந்த மாதம் கேரளாவில் சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார்.
காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி, கடந்த மாதம் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார். படப்பிடிப்புக்கு வந்த கேரளா திருச்சூரை சேர்ந்த விஜூ வி.கே என்பவர், விடுதியில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இந்நிலையில், ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாஸ்திகட்டே அருகிலுள்ள மாணி அணையில், ரிஷப் ஷெட்டி உள்பட 30 பேரை ஏற்றிச்சென்ற ஒரு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள படப்பிடிப்பு உபகரணங்கள் நீரில் மூழ்கி வீணாகிவிட்டது.
‘காந்தாரா: சாஃப்டர் 1’ படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக ஏற்படும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களால் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு என்ன பரிகாரம் செய்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.