சென்னை: மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். 4 வருடங்களுக்குப் பிறகு கார்த்தி ஜோடியாக ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார். ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படம் குறித்து அனு இம்மானு வேல் கூறியதாவது: தெலுங்கில் அதிக கவனம் செலுத்தியதால் தமிழில் நடிக்கவில்லை. ராஜூ முருகன் இயக்கிய படங்களைப் பார்த்துள்ளேன். அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ‘ஜப்பான்’ படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருந்ததால் நடித்தேன்.
இதில் கார்த்தியின் காதலியாக வருகிறேன். இது வழக்கமான காதலாக இருக்காது. புதிய கோணத்தில் இருக்கும். கதை என்னைச்சுற்றி நடக்கும் என்பதால், எனது கேரக்டரைப் பற்றி விரிவாகப் பேச முடியாது. கார்த்தியுடன் நடித்தது ஒரு மறக்க முடியாத நல்ல அனுபவம். அவர் அமைதியானவர், குறைவாகப் பேசுவார். வேலையில் கவனமாக இருப்பார். சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவார். சினிமாவிலுள்ள அனைத்து துறைகள் குறித்தும் அவருக்கு தெரியும். நடிப்பு, டயலாக் டெலிவரி, நேரம் தவறாமை உள்பட பல்வேறு விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். நடுங்கும் குளிரில் காஷ்மீரில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ‘ஜப்பான்’ படம் தமிழில் எனக்கு திருப்புமுனையாக அமையும். இனி அடிக்கடி என்னை தமிழில் பார்க்கலாம்.