தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல முடியவில்லை. பேராசை ெகாண்ட ஒருவரது ஆத்மா கடலை ஆட்கொண்டு, மீன் பிடிக்க வருபவர்களை எல்லாம் கொன்று குவிப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அரசு, அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கிறது. 40 வருடங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள், கிடைக்கின்ற வேலைகளை எல்லாம் செய்கின்றனர். சில இளைஞர்கள் தங்களை அறியாமலேயே, கடல் அட்டை என்ற பெயரில் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவரான கிங்ஸ்டன் (ஜி.வி.பிரகாஷ் குமார்), அதன் பின்னணியில் இருப்பது யார் என்று கண்டுபிடித்து, சபிக்கப்பட்ட கடலுக்கு சென்று, தூவத்தூர் மக்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க முயற்சிக்கிறார். மர்மங்கள் சூழ்ந்த ஆழ்கடலுக்குள் நண்பர்களுடன் சென்ற ஜி.வி.பிரகாஷ் குமார் உயிருக்கு போராடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை கடல் ஹாரர் திரில்லர் ஃபேண்டஸியாக சொல்லியிருக்கின்றனர்.
மீனவ இளைஞன் கிங்ஸ்டனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடிலாங்குவேஜ் மற்றும் வசன உச்சரிப்பு களை மாற்றி சிறப்பாக நடித்துள்ளார். ஆழ்கடலுக்குள் இன்னொரு உலகில் அவரும், நண்பர்களும் சந்திக்கும் பிரச்னைகள் திடுக்கிட வைக்கின்றன. 25வது படம் என்பதால், ஜி.வி.பிரகாஷ் குமார் தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். திவ்யபாரதி துணிச்சலாக சண்டை போட்டிருக்கிறார். அழகம்
பெருமாள், சேத்தன், குமரவேல், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ராஜேஷ் பாலசந்திரன், அருணாசலேஸ்வரன், வில்லன் சாபுமோன் அப்துசமத் ஆகியோரும் கேரக்டருக்கான நடிப்பை கச்சிதமாக வழங்கி இருக்கின்னர்.
கடற்கரை கிராமம், கடல், ஆழ்கடல் அமானுஷ்ய சம்பவங்கள் ஆகியவற்றை ஒளிப்பதி
வாளர் கோகுல் பினோய் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனத்தை ஈர்க்கிறது. பிரமாண்டமான விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. எடிட்டர் சான் லோகேஷ் மற்றும் ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தியின் பணிகள் பாராட்டுக்குரியது. எழுதி இயக்கிய கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களை ஃபேண்டஸியாக சொல்லியிருக்கிறார். முற்பகுதி நீளத்தை குறைத்து, திரைக்கதை மற்றும் கேரக்டர்களின் வடிவமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.