கனா புரொடக்சன்ஸ், விபி கம்பைன்ஸ் தயாரிப்பில் திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர் எழுத அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ கூரன் ‘. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியான ஓய்.ஜி. மகேந்திரன் தனது வாழ்க்கை அனுபவங்களை ஒரு நேர்காணலில் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. அவர் தீர்ப்பு கூறிய வழக்குகளில் முக்கியமான, மறக்க முடியாதது எது என்கிற போது அவர் ஒரு வழக்கைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒரு குடிகாரனால் காரை விட்டு ஏற்றிக்கொன்று விட்டுப் பறந்து செல்கிறது. அந்தத் தாய் நாய் குறைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது.தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்ல அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. அதன் பிறகு வழக்கறிஞர் எஸ். ஏ. சந்திரசேகர் தனக்கு உதவுவார் என எண்ணி அவர் வீட்டில் நிற்க கதை நீதிமன்ற டிராமாவாக நகர்கிறது.
நாய்க்கு நிதி கிடைத்ததா இல்லையா என்பது மீதிக் கதை. படத்தின் மையக்கருவான நாய் மிக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறது. அதன் பார்வை, தவிப்பு என அத்தனையும் அசத்தல். எஸ்.ஏ.சந்திரசேகர் கோர்ட் காட்சிகள் அறிவுரையாகவும் அவசியமாகவும் கடந்து செல்கின்றன. ஆனால் மீதி காட்சிகள் சற்று சலிப்பு தான். மேலும் சில இடங்கள் சினிமா உருவாக்க முதிர்ச்சியின்றி நிற்கிறது. கூரன் என்றால் கூர்மையானவன் என்று அர்த்தம். ஒரு நாயின் புத்தி கூர்மையை சொல்லும் படம் என்பதால் கூரன் என்கிற தலைப்பு.
பெரும்பாலும் மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு விலங்குகள் செயல்படுவது போல் தான் கதைகள் இருக்கும். ஆனால் இதில் அந்த நாயின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மனிதர்கள் செயல்படுவது போல் காட்சிகள் உள்ளன. எனவே இதனை வித்தியாசமான கதையாக உணரலாம். நீதிமன்றக் காட்சிகளில் வாதப் பிரதிவாதங்கள் , தண்டனைச் சட்டங்கள் ,சட்ட உட்பிரிவுகளைப் பற்றி எல்லாம் காட்சிகள் வரும் போது எஸ்.ஏ. சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை,நீதிக்கு தண்டனை போன்ற பழைய படங்களின் நீதிமன்றக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
அதே பரபரப்பான எஸ். ஏ . சந்திரசேகரை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது. நிதின் வேமுபதி இயக்கத்தில் ஏதோ ஒரு படமாக இல்லாமல் அவசியமான படமாக நிற்கிறது. மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவில் நாயின் உணர்வுகள் , அதன் பயிற்சி தருணங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. தேவையற்ற சீரியல் டெம்ப்ளேட் பிரேம்களை தூக்கியிருக்கலாம் எடிட்டர் மாருதி. சித்தார்த் விபின் இசை காட்சிகளுக்கான அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் படமாக பார்க்கையில் ஆங்காங்கே சில முதிர்ச்சியற்ற காட்சிகள் தென்பட்டாலும் கதையாக இப்போதைய மது போதை சமூகத்துக்கு நிச்சயம் அவசியமான படமாக மாறி இருக்கிறது இந்த கூரன்.