சேகர் கம்முலா இயக்கத்தில், ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் ” குபேரா “. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ், ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மத்திய அரசின் எரிவாயு ஒப்பந்தத்தை தனியார் மயமாக்கி அதற்கு லஞ்சப் பட்டுவாடா கொடுக்கும் வகையில் ஒரு பெரிய சதி நடைபெறுகிறது. இந்த பணத்தை எவ்வித சான்றுகளும் இல்லாமல் பரிமாறுவதற்கு பிச்சைக்காரர்களை பயன்படுத்தும் திட்டம் போடுகிறார் தொழிலதிபர் நீரஜ் ( ஜிம் சார்ப்). இதனை எந்தத் தடயமும் இல்லாமல் முடித்துக் கொடுக்கும் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார் முன்னாள் வருமான வரி அதிகாரி மற்றும் இந்நாள் கைதி தீபக் ( நாகார்ஜுன்). இவர்கள் தேர்வு செய்யும் பிச்சைக்காரர்களில் ஒருவராக வருகிறார் தேவா (தனுஷ்).
நினைத்தபடி பணப்பட்டு வாடா நடந்ததா தேவாவின் வேலை என்ன, தீபக் யார் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து படத்தின் கிளைமாக்ஸ். தனுஷ் பிச்சைக்காரராக தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவரது அப்பாவி தோற்றம், எதார்த்த நடிப்பு, இயற்கையான உடல்மொழி கதைக்கு மிகப் பெரிய பலம். நாகார்ஜுனா நடித்த தீபக் கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என கேள்வி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா படத்தில் அவசியமா என்ற எண்ணத்தை எழுப்பினாலும், அவர் தன் பங்கை நன்றாக செய்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது.
திருப்பதி, மும்பை ஆகிய இடங்களின் உண்மை நிலையை நிக்கேத் பொம்மிரெட்டி தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங் ஓரளவு மெருகேற்றப்பட்டிருந்தாலும், 3 மணி நேர ஓட்டம் சற்று நீளமாகவே தெரிகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஆனால் பாடல்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை போய் வா நண்பா பாடலை தவிர. ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை போன்ற பல சமூக உண்மைகளை பேசுகிறது. அதே நேரத்தில், சில இடங்களில் கதையின் லாஜிக்கில் பிழைகள் காணப்படுகின்றன.
இவ்வளவு பெரிய ஊழல் நடக்கும்போது போலீசாருக்கு அது தெரியாமல் போவதும், அது பெரிய செய்தியாக மாறாமல் போவதும் சற்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில், “குபேரா ” இந்த நாட்டில் வாழ்வதற்கு அத்தனை பேருக்கும் உரிமை உண்டு. அதை பணக்காரர்களுக்கான உரிமையாக மாற்றுவது தவறு என வகுப்பெடுத்த விதத்தில் தற்சமயம் நாட்டின் தனியார் மயமாக்கல் நிலைக்குத் தேவையான படமாக மாறி இருக்கிறது.