கிராமத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று, கட்டிடம் கட்டும் பணியில் சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு அனுப்பி, பெற்றோரையும் மற்றும் அண்ணன் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார் சந்தோஷ் நம்பிராஜன். அப்படியே சின்ன கடை ஒன்றையும் கட்டுகிறார். அவருக்கும், குஷிக்கும் திருமணமாகிறது. பாட்டி இறந்துவிடுகிறார். அம்மாவுக்கு கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை நடக்கிறது. குஷி ஒரு மகனுக்கு தாயாகிறார். அண்ணன் ஊதாரியாக திரிகிறான்.
இந்நிலையில், தங்களுடனேயே வந்து செட்டிலாகும்படி குஷி கெஞ்ச, அதைப் பொருட்படுத்தாமல் சிங்கப்பூரில் கடுமையாக உழைக்கும் சந்தோஷ் நம்பிராஜன், தன் லட்சியத்தில் ஜெயித்தாரா என்பது மீதி கதை. ‘அவனுக்கு என்னப்பா… சிங்கப்பூர்ல சம்பாதிக்கிறான்’ என்ற பொறமைப் பேச்சை கிராமங்களில் கேட்க முடியும். சிங்கப்பூரிலேயே தங்கி கடுமையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் வலி புரியும்.
இழந்த சந்தோஷம், குடும்பத்தினருக்கு ஏற்படும் நெருக்கடி போன்ற விஷயங்களை சொல்லும் ஹீரோவும், இயக்குனருமான சந்தோஷ் நம்பிராஜன், நிஜமாகவே சிங்கப்பூர்வாசி என்பதால், காட்சிகளில் நம்பகத்தன்மை தெரிகிறது. தனக்குப் பங்கிடாமல், வீட்டை அண்ணனுக்கு மட்டும் எழுதி வைத்த பெற்றோரிடம் குமுறும் அவரது நடிப்பு யதார்த்தம். அவருக்கும், குஷிக்குமான முதலிரவில் கட்டில் உடைந்ததால் ஏற்படும் களேபரம், நாகரீகமான நகைச்சுவை. குஷியும் சாந்தமாக, பாந்தமாக இருக்கிறார். வீக் பாயின்ட்டால் தன்னை வீழ்த்திய கணவனுக்கு அவர் தரும் விருந்து, பரவசம்.
சிங்கப்பூர் துரைராஜ், அன்பு ராணி, கார்த்திக் சிவன், இயக்குனர் சம்பத் குமார் ஆகியோரும் மிகையின்றி நடித்துள்ளனர். ‘வாழ்க்கைக்குப் பணம் முக்கியம். அதைவிட வாழ்க்கை முக்கியம்’ என்பதை படம் வலியுறுத்துகிறது. அழுத்தமான விஷயத்தை மேலோட்டமாகச் சொன்னாலும், சிங்கப்பூரை நேரில் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. தொழிலாளர்களின் வலியையும் உணர முடிகிறது. பின்னணி இசை பலத்தைச் சேர்க்கவில்லை. மசூத் ஷம்ஷாவின் இசையில் பாடல்கள் கதையுடன் இணைந்துள்ளன. சதீஷ் துரைக்கண்ணுவின் ஒளிப்பதிவு, சிங்கப்பூரை இயல்பாகப் பதிவு செய்துள்ளது.