சென்னை: திரைக்கு வந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’, நேரடியாக ஓடிடியில் வெளியான ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கியுள்ள படம் ‘வேட்டையன்’. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்து இருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் நடித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நேரடியாக தமிழில் அறிமுகமாகும் படம் இது. மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். பிறகு அஜித் குமாருடன் ‘துணிவு’ படத்தில் நடித்தார். தற்போது ‘வேட்டையன்’, ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சு வாரியர் அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அவர் அதிரடியாக கூறியிருப்பதாவது:
நான் ரஜினிகாந்த் சாரின் மனைவி வேடத்தில் ‘வேட்டை யன்’ படத்தில் நடித்துள்ளேன். இன்னும் டப்பிங் பேசவில்லை. என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொல்கின்றனர். அந்த வார்த்தையைக் கேட்கும்போது, தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என்னை இப்படி அழைப்பதால், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பட்டம் எனக்கு தேவையில்லை. கடைசி வரைக்கும் எனது ரசிகர்களின் அன்பு மட்டுமே போதுமானது.