சென்னை: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயீப் அலிகான், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘தேவரா’ என்ற படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், ‘சென்னையில் நான் குச்சிப்புடி நடனம் கற்றுக்கொண்டேன் என்ற விஷயம் பலபேருக்கு தெரியாது. தமிழ் இயக்குனர்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் ஆசை இருக்கிறது.
நாம் மொழியால் மட்டுமே பிரிந்திருக்கிறோம். சினிமாவால் அல்ல. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று நம்மைப் பிரித்துப் பார்க்க முடியாது’ என்றார். பிறகு ஜான்வி கபூர் பேசுகையில், ‘சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சென்னை என்றாலே எனது தாயார் தேவியுடன் தங்கியிருந்த பல்வேறு சம்பவங்களைப் பற்றிய ஞாபகங்கள் ஏற்படுகின்றன. அவருக்கு வழங்கிய அதே அன்பையும், ஆதரவையும் எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார். தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு, இயக்குனர் கொரட்டலா சிவா, தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், கலையரசன் பேசினர்.