கணவர் வினீத்தால் விலக்கப்பட்டு தனியாக வசிக்கும் ரோகிணியிடம் வந்த அவரது மகள் லிஜோமோல் ஜோஸ், தான் ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ரோகிணி மகளின் காதலை அங்கீகரிக்க, லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை அழைத்து வருகிறார். அவரைப் பார்த்ததும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். காரணம், லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது தன்னைப்போன்ற ஒரு பெண் அனுஷா பிரபுவை.
முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவராக இருந்தாலும், மகளின் தன்பாலின காதலை ரோகிணி எதிர்க்கிறார். இந்நிலையில் லிஜோமோல் ஜோஸ், அனுஷா பிரபு காதல் வென்றதா என்பது மீதி கதை. இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின். ‘லென்ஸ்’, ‘தலைக்கூத்தல்’ போன்ற அவரது படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தை இப்படமும் ஏற்படுத்தியுள்ளது. கதையின் நாயகி லிஜோமோல் ஜோஸ், சவாலான கேரக்டரை சிறப்பாகவும், துணிச்சலாகவும் கையாண்டுள்ளார். மகளின் உணர்வை மதிப்பதா? மிதிப்பதா என்று தடுமாறும் அம்மாவாக ரோகிணி மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
முன்னாள் கணவராக வினீத், லிஜோமோல் ஜோஸை ஒருதலையாய் காதலித்த கலேஷ், லிஜோமோல் ஜோஸின் காதல் துணை அனுஷா பிரபு, வீட்டு வேலைக்காரி தீபா ஆகியோரும் இயல்பான நடித்து மனதைக் கவர்கின்றனர். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு, கண்ணன் நாராயணன் இசை, டேனி சார்லஸ் எடிட்டிங், உமா தேவியின் பாடல் ஆகிய விஷயங்கள், படத்தின் மிகப்பெரிய பலம். எழுதி இயக்கியுள்ள ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தன்பாலின சேர்க்கையாளர்களின் பக்கம் நின்று தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்கிறார். அதை ஏற்பதும், விலக்குவதும் பார்வையாளரின் முடிவுக்கு உட்பட்டது.