பெரிய நிறுவனத்தில் பணியாற்றுபவர், சதா நாடார். அவரது காதல் மனைவி, மோனிகா செலேனா. விரைவில் பெற்றோராக இருக்கும் நிலையில், சதா நாடாருக்கு விபரீத கனவுகள் வந்து நிம்மதி கெடுகிறது. கனவில் அவரே மனைவியைக் கொல்வது போலவும், வேறொரு பெண்ணிடம் பாலியல் தொடர்புகொள்வது போலவும் காட்சிகள் விரிகிறது. கனவில் கண்ட காட்சிகள், அடுத்த நாள் நிஜத்தில் நடக்கிறது. மனைவியை தானே கொன்றுவிடுவோமோ என்றும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவமானப்பட வேண்டுமோ என்றும், மன உளைச்சலுடன் தவிக்கிறார். இதையறிந்த மோனிகா செலேனா, கணவரின் கனவை தடுக்க முடியாமல் குழம்புகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
ஈரோட்டைச் சேர்ந்த நிஜ காதல் தம்பதி சதா நாடார், மோனிகா செலேனா ஆகியோரில், சதா நாடார் எழுதி இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். மனைவியாக மோனிகா செலேனா நடித்து பாடியிருக்கிறார். நிஜமான தம்பதி என்பதால், அவர்களின் காதல் காட்சிகளும், பெட்ரூமில் ஏற்படும் உரசலும், ஊடலும் இயல்பாக இருக்கிறது. கனவில் காணும் காட்சியைக் கண்டு அலறுவது, மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் இரவைக் கழிப்பது, அப்பெண்ணின் திடீர் மரணம் தன்மீது கொலைப்பழியாக விழுந்து போலீஸ் துரத்தும்போது பயப்படுவது என்று, சதா நாடார் இயல்பாக நடித்துள்ளார்.
வசீகரமாகவும், நடிப்புத்திறமையுடனும் காணப்படும் மோனிகா செலேனா, நிறைமாத கர்ப்பிணியாக வலியுடன் போராடுவது உருக வைக்கிறது. பாடல் காட்சிகளில் கிளாமராக தோன்றுகிறார். ஹீரோவின் மாமாவும், அடிக்கடி ‘தெய்வமே’ என்று சொல்பவரும் காமெடி செய்துள்ளனர். எம்.எஸ்.மனோகுமாரின் ஒளிப்பதிவு, ஈ.ஜே.ஜான்சனின் இசை, பரணி செல்வத்தின் எடிட்டிங், சுரேஷ் சர்மாவின் பின்னணி இசை, சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு தேவையானதை நேர்த்தியுடன் கொடுத்துள்ளன. கனவுக்கதையின் கிளைமாக்ஸ் எதிர்பாராதது. சில காட்சிகள் நாடகத்தன்மையுடன் நகர்வதை கவனித்து மாற்றியிருக்கலாம்.