தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் எடிட்டராக செயல்பட்ட லியோ ஜான் பால், தனது முதல் இயக்குனரவதாரத்தில் ஒரு ” மார்கன் ” படம் கொடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா, கனிமொழி, மகாநதி சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது.
மர்மமான முறையில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். உடல் கருப்பாக்கப்பட்டு குப்பையில் வீசப்படுகிறது. இதே பாணியில் துருவ் கோரக் (விஜய் ஆண்டனி) மகளும் கொல்லப்பட, அவர் நேரடியாக விசாரணையில் இறங்குகிறார். தேடலில் தமிழறிவு (அஜய் தீஷன்) என்கிற நீச்சல் வீரர் மீது சந்தேகம் குவிகிறது. பின் , உண்மையையும் தேடும் பயணம் தான் மீதிக் கதை.
விஜய் ஆண்டனி – சாதாரண ஹீரோவில் இருந்து தப்பி ஒரு வேறு பரிமாண கதாநாயகனாக தெரிகிறார். காதலும் இல்லை, மாஸ் காட்சிகளும் இல்லை. முகத்தின் பாதி கருப்பாக மாறிய ஒருவனாகவே படம் முழுக்க நடிக்க துணிந்திருக்கிறார். அவரது நேர்த்தியான நடிப்பு பாராட்டத்தக்கது.
அஜய் தீஷனுக்கு இது முதல் படம் என்றாலும், கண்களில் உணர்வு தெரியும். அவரது நடிப்பு கதையின் மேன்மையை கூட்டுகிறது. கனிமொழி தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். சமுத்திரக்கனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் தங்களுக்கான பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவில் சிறப்பாக காட்சிகள் பேசுகின்றன. நீருக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களை திரையிலேயே கட்டிக்கொள்கின்றன. பாராட்டுகள் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா.
எடிட்டராகவும் இயக்குநராகவும் இரட்டை பொறுப்பில் செயல்பட்ட லியோ ஜான் பால், கதைநடையில் எங்கும் தடுமாறாமல், தேவையற்ற காட்சிகளுக்கெல்லாம் இடம் தராமல் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
கொலையின் பின்னணி — பழி, கோபம் போன்ற வழக்கமானவையாக இருந்தாலும், “யார், ஏன்” என்பதற்கான விளக்கம் கொஞ்சம் நியாயமாக கொடுத்திருக்கலாம்.
மொத்ததில் மர்மம் நிறைந்த விசாரணை. அழுத்தமுள்ள காட்சிகள். எதார்த்தமாகப் பேசும் ஒளிப்பதிவு. புது முகங்களின் பக்குவமான நடிப்பு. இவை அனைத்தையும் ஒன்றிணைத்திருக்கிறது மார்கன்.