சென்னை: விதார்த், டெல்னா டேவிஸ், பாரதிராஜா, பி.எல்.தேனப்பன், ‘என் உயிர்த் தோழன்’ ரமா நடிப்பில் வெளியான ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர், நித்திலன். இதையடுத்து அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, பி.எல்.தேனப்பன், நட்டி, சிங்கம்புலி நடிப்பில் வெளியான படம், ‘மகாராஜா’. இதை பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.
இப்படம் தியேட்டர்களில் மிகப்பெரிய வெற்றிபெற்று, பிறகு ஓடிடி தளத்திலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ‘மகாராஜா’ படம் வெளியாகும் முன்பே நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்க நித்திலனை பேஷன் ஸ்டுடியோஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ள இப்படத்துக்கு ‘மகாராணி’ என்ற பெயர் பரிசீலனையில் இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.