திருடுவதையே தொழிலாக கொண்ட சேது, இரவில் ஆடு திருடும்போது கிராமத்து மக்களிடம் சிக்கியதால், தப்பித்து ஓடி கிணற்றில் குதிக்கிறார். அங்கு ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மந்திரக்கிழவியின் வீடு இருக்கிறது. அதே நாளில் பெரும்புள்ளி பி.எல்.தேனப்பன், வாரிசு இல்லாத தனது சித்தப்பா, சித்தியை சொத்துகளுக்கு ஆசைப்பட்டு அடியாட்களை வைத்து கொலை செய்கிறார். இரு சம்பவத்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார்.
சேதுவை மந்திரக்கிழவியின் பேத்தி சம்ரிதி தாரா காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார். பிறகு அவர்கள் காதலிக்கின்றனர். உடல்நிலை தேறிய சேது திருமணம் செய்துகொண்டு திருந்தி வாழ நினைக்கிறார். அப்போது கொலைக்கு காரணம் பி.எல்.தேனப்பன் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்டுபிடிக்கிறார். உடனே தனது அடியாட்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ள பி.எல்.தேனப்பன் சொல்கிறார். திருந்தி வாழும் சேது, போலீஸ் இன்ஸ்பெக்டரின் வலையில் வசமாக சிக்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
‘மைனா’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்திய சேது, இதில் கதையின் நாயகனாக கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். காதலியின் முடிவை நினைத்து அவர் துடிப்பது உருக்கம். புதுவரவு சம்ரிதி தாரா இயல்பாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார். வில்லன் பி.எல்.தேனப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.எம்.பாலா, சூனியக்காரி ரத்னகலா மற்றும் படத்தில் தோன்றியுள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பனின் பணி சிறப்பானது. புதுவரவு அமர்கீத்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஏபிஜி.ஏழுமலை இயக்கியுள்ளார். இன்னும் எத்தனை படங்களில் அப்பாவிகளை போலீஸ் சுட்டுக் கொல்வது போல் காட்சிகளை படமாக்குவார்களோ தெரியவில்லை.