கொச்சி: பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் நடந்து வந்த ‘பிரம்மயுகம்’ என்ற பான் இந்தியா படத்தில், மம்மூட்டி சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ஒட்டப்பாலத்தில் தொடங்கப்பட்டது. மற்ற நட்சத்திரங்கள் அர்ஜூன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. முழு படப்பிடிப்பும் வரும் அக்டோபர் 2வது வாரத்தில் முடிவுஅடையும். சக்ரவர்த்தி ராமச்சந்திரா, ஒய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரிக்கும் இப்படத்துக்கு ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார். ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ராகுல் சதாசிவன் எழுதி இயக்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
27