திருவனந்தபுரம்: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள படத்தின் கிளைமாக்சில் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை படக்குழு பயன்படுத்தியது. இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படத்தின் இந்த பாடல், இப்போது மீண்டும் பிரபலம் ஆக மஞ்சும்மல் பாய்ஸ் படமும் ஒரு காரணமாக அமைந்தது. படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வந்த நிலையில், தயாரிப்பாளருக்கு புது பிரச்னை வந்து சேர்ந்தது. ‘குணா’ படத்தின் பாடலை பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி கோரவில்லை.
இதனால் ‘குணா’ படத்திற்கு இசையமைத்த இளையராஜா, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பூர்வ நோட்டீஸ் கிடைத்ததும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள், இளையராஜாவை நேரில் சந்தித்து பேசியிருந்தனர். இந்தநிலையில், இளையராஜா தரப்பு, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இளையராஜா இழப்பீடாக கேட்ட 2 கோடி ரூபாயில், 60 லட்சம் ரூபாயை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லாமல், பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.