பள்ளி மாணவன் ஷ்யாம் செல்வனும், மாணவி ரக்ஷணாவும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். அப்பள்ளி சார்பில் மாவட்ட அளவில் யார் முதல் மதிப்பெண் எடுக்கிறாரோ, அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் கடுமையான போட்டி நடக்கிறது. ஆனால், ஒரு பாடத்தில் ரக்ஷணாவுக்காக விட்டுக்கொடுத்து தேர்வு எழுதி பின்தங்கிய ஷ்யாம் செல்வன், ஆரம்பத்தில் இருந்தே தன் காதலை ஏற்றுக்கொள்ளாத ரக்ஷணாவின் மனதில் இடம் பிடிக்கிறார். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ரக்ஷணா, தனக்காக ஷ்யாம் செல்வன் செய்த தியாகத்தை தொடர்ந்து அவரைக் காதலிக்கிறார். பிறகு வழக்கம்போல் சாதி, அந்தஸ்து, கவுரவம், மானம், மரியாதை குறுக்கிடுகிறது. அதன் விளைவை படம் சொல்கிறது. பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்கியுள்ள முதல் படம் இது. ஆணவப் படுகொலையை மையப்படுத்தி, இறுதிக்காட்சியில் புதிய தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.
புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்ஷணா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். தன் தாத்தா மீது பாசத்தைப் பொழிந்து, பிறகு அவர் செய்த துரோகத்தை எண்ணி அதிர்ந்து விபரீத முடிவு எடுக்கும் ரக்ஷணா, சிறந்த நடிப்பில் முதலிடம் பெறுகிறார். தாத்தாவாக பாரதிராஜா, மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். யாரையாவது போட்டுத்தள்ள வேண்டும் என்று துடிக்கும் கேரக்டரில் சுசீந்திரன் மிரட்டலாக நடித்துள்ளார். மற்றவர்களும் அந்தந்த கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளனர். வாஞ்சிநாதன் முருகேசன் தனது ஒளிப்பதிவில், பழைய பாரதிராஜாவின் கிராமத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இளையராஜா பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். பின்னணி இசையில் காட்சிகளை மெருகேற்றி இருக்கிறார். பள்ளிப் பருவத்து காதல் காட்சிகள் பார்த்துப் பார்த்துச் சலித்தவை. மேக்கிங்கில் இயக்குனர் இன்னும் அதிகமாக உழைத்திருக்கலாம். ஆணவப் படுகொலைக்கு எதிராக படம் பேசியிருக்கிறது.