பெங்களூரு: நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதையில் உருவாகும் பான் இந்தியா படம், ‘மார்டின்’. இதில் கன்னட நடிகரும் அர்ஜுனின் சகோதரி மகனுமான துருவா சார்ஜா ஹீரோவாக நடிக்கிறார். வைபவி சாண்டில்யா நாயகியாக நடிக்கிறார். மாளவிகா, சாது கோகிலா, அச்யுத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.பி.அர்ஜுன் இயக்கும் இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளன.
இந்தப் பணிகளுக்காக, பெங்களூரு மகாதேவ் பூரில் நிறுவனம் நடத்திய சத்யா ரெட்டி என்பவர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு ரூ.3.20 கோடியை தயாரிப்பாளர் உதய் மேத்தா வழங்கினார். ஆனால், கிராபிக்ஸ் பணிகளை முடிக்காமல் ஏமாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு பசவேஷ்வர்நகர் போலீஸ் ஸ்டேஷனில் உதய் மேத்தா புகார் அளித்தார். இதையறிந்த சத்யா ரெட்டி தலைமறைவானார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்த சத்யா ரெட்டியை போலீஸார் கைது செய்தனர்.