சென்னை: வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா, சுராஜ் உதய் மேத்தா இணைந்து தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘மார்டின்’. நடிகர் அர்ஜூன் சர்ஜா கதை எழுதியுள்ளார். வசனம் எழுதி ஏ.பி.அர்ஜூன் இயக்கியுள்ளார். துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் நடித்துள்ளனர். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார். பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பொறுப்பை ரவி பஸ்ரூர் ஏற்றுள்ளார். வரும் அக்டோபர் 11ம் தேதி 13 மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற அர்ஜூன் சர்ஜா உருக்கத்துடன் பேசியதாவது:
என் சகோதரியின் மகன் துருவா சர்ஜாவை (மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி) தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் எனக்கு 2 ரோல்கள். ஒன்று, துருவாவின் மாமா. ஆனால், அவனை என் மகனாகப் பார்க்கிறேன். இன்னொன்று, திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் 5வது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவனுக்கு என்னைப்போல் ஒரு கதை எழுத வேண்டும் என்று யோசித்து இக்கதையை எழுதினேன். ஆக்ஷன், எமோஷன், லவ், வித்தியாசமான திரைக்கதை, நிறைய ஃபாரின் நடிகர், நடிகைகள் என்று எல்லாமே இருக்கிறது.