இந்திய ராணுவத்தின் ரகசிய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, தன்னுடன் பணியாற்றும் நண்பர் சரத்குமாரின் தங்கையைக் காதல் திருமணம் செய்கிறார். ஒரு மழைநாளில் அவரைக் கொல்லத் துரத்தும் முன்னாள் எதிரியின் தாக்குதலில், மனைவியுடன் சேர்ந்து அவரும் இறந்துவிட்டார் என்ற தகவல் பரப்பப்படுகிறது. உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்றிய சரத்குமார், தன் மகனைப் பறிகொடுத்த அமைச்சரால் மீண்டும் விஜய் ஆண்டனியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறார். வில்லன் டாலி தனஞ்செயா, தலைமறைவு வாழ்க்கை நடத்தும் விஜய் ஆண்டனியைக் கண்டுபிடிக்கிறார். அவரும், போலீஸ் முரளி சர்மாவும் சேர்ந்து விஜய் ஆண்டனியை தீர்த்துக்கட்ட முயற்சிக்கின்றனர். இதையறிந்த சத்யராஜ், அமைச்சர் ஏ.எல்.அழகப்பனின் நிர்ப்பந்தத்தால் விஜய் ஆண்டனியைக் கொல்லும்படி சரத்குமாருக்கு உத்தரவிடுகிறார். அந்தமான் சென்ற சரத்குமார், விஜய் ஆண்டனியைக் கண்டுபிடித்தாரா? டாலி தனஞ்செயாவை விஜய் ஆண்டனி என்ன செய்தார் என்பது மீதி கதை.
விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வந்துள்ளது. நடிப்பிலும், பாடிலாங்குவேஜிலும் வித்தியாசம் காட்டியுள்ள விஜய் ஆண்டனி, ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார். சரண்யா பொன்வண்ணனுடனான பாசத்தில் மனதைக் கவர்கிறார். மேகா ஆகாஷ் இயல்பாக நடித்துள்ளார். வில்லன் டாலி தனஞ்செயா, போலீஸ் முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பர், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், இயக்குனர் ரமணா ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். விஜய் ஆண்டனியைக் காப்பாற்ற வரும் சரத்குமாரின் கேரக்டர் கம்பீரமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராதது. அவரும் கலங்கி, ரசிகர்களையும் பரிதாபப்பட வைக்கிறார். அவருக்கு உத்தரவு பிறப்பிக்கும் சத்யராஜின் அனுபவ நடிப்பு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கிய எஸ்.டி.விஜய் மில்டன், ‘தீயவனை கொல்லக்கூடாது. தீமையைத்தான் கொல்ல வேண்டும்’ என்ற மெசேஜுடன், 3வது பாகத்தை தொடங்கி வைக்கிறார். விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணியுடன் 5 பேர் இசை அமைத்துள்ளனர். பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளை வலுவாக்கியுள்ளது. எளிதில் கணிக்க முடியும் காட்சிகளும், திரைக்கதையும் பலவீனம்.