சென்னை: ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘மெய்யழகன்’. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ளனர். பிரேம்குமார் பேசும்போது, ‘சமீபமாக வெறுப்பு, எதிர்மறை சிந்தனைகள் அதிகமாகிவிட்டது. அது வழக்கமாகவும் மாறிவிட்டது.
அது வேண்டாம் என நினைத்து அன்பை தேடி பயணிக்க வேண்டி உள்ளது. அப்படி ஒரு பயணமாக இந்த படம் இருக்கும். இந்த படம் பார்த்த பிறகு எதோ ஒரு வகையில் சிலரிடம் மனம் விட்டு பேச வைக்கும். மன்னிப்பு கேட்க வைக்கும்’ என்றார். அரவிந்த் சாமி பேசுகையில், ‘இந்த படத்தின் கதை என் வாழ்வில் நடந்த கதை. படம் வெளியான பிறகு என் கதையைச் சொல்கிறேன். இது எனக்கு ஒரு சிறப்பான படம். 90களில் படம் நடிக்க ஆரம்பித்தேன்.
ஒரு சில படங்கள் மட்டுமே எனக்கு இது போன்று நேர்மறை எண்ணங்கள் அடங்கிய படங்களாக அமைந்துள்ளது’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘படத்தின் கதையை கொடுத்து பிரேம்குமார் படிக்கச் சொன்னார். அதை படிக்க படிக்க அழுதுவிட்டேன். ‘கைதி’க்குப் பிறகு அதிக நேரம் இரவில் படமாக்கப்பட்ட படம் மெய்யழகன். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிற இரண்டு பேர் பேசுகிற விஷயம் தான் இந்தப் படம். இதில் சண்டைக் காட்சிகள் இல்லை. அதனை எதிர்பார்த்து இந்த படத்துக்கு வராதீர்கள்’ என்றார்.