திருவனந்தபுரம்: கடந்த 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஹிட்டான படம், ‘திரிஷ்யம்’. மலையாளத்தில் வெளியான இப்படம், பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய படம் இது. ‘திரிஷ்யம் 1’, ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 2013ல் ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ், ஜோட் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து இப்படங்களை ஹாலிவுட்டில் தயாரிக்கிறது.
கொரியன் மொழியில் ‘திரிஷ்யம்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், 10 நாடுகளிலுள்ள மொழிகளில் ‘திரிஷ்யம்’ படங்களை ரீமேக் செய்ய பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் முடிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் 3ம் பாகம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில்…
மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால், மம்மூட்டி இணைந்து நடிக்கும் படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இதில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கான ஷூட்டிங்கில் பங்கேற்க இலங்கை சென்றுள்ள மோகன்லால், இலங்கை நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கும் விதமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். நாடாளுமன்றத்தில் அவருடைய பெயர் உச்சரிக்கப்பட்டு, அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு இலங்கை பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர், நாடாளு மன்ற பொதுச்செயலாளர் ஆகியோரை மோகன்லால் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.