மலையாள மெகா ஸ்டார் மோகன்லால் மகன் பிரணவ், மலையாளத்தில் நடித்தபடியே உதவி இயக்குனராகவும் பணியாற்றுகிறார். இந்நிலையில், மோகன்லால் மகள் விஸ்மயா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தாய்லாந்து தற்காப்புக்கலையில் தேர்ச்சிபெற்ற அவர், பயணம் செய்வது மற்றும் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் எழுதிய ‘கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகம் பலரது கவனத்தை ஈர்த்தது. அப்போது, சினிமாவில் நடிக்க தனக்கு ஆர்வம் இல்லை என்று சொன்ன விஸ்மயா, பொது மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆனால், தற்போது விஸ்மயா மோகன்லால் என்ற பெயருடன் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் 37வது படமான ‘துடக்கம்’ என்ற படத்தில் விஸ்மயா நடிக்கிறார். ஜூட் ஆண்டனி ஜோசப் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்நிலையில், மகள் விஸ்மயாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோகன்லால் கூறுகையில், ‘அன்புள்ள மாயாக்குட்டி. ‘துடக்கம்’ என்ற படம், வாழ்நாள் முழுவதுமான உன் சினிமாவின் அன்பு பந்தத்துக்கு முதல் படியாக அமையட்டும்’ என்றார். ஜூட் ஆண்டனி ஜோசப் கூறுகையில், ‘என் லாலேட்டன், சுஜி சேச்சியின் அன்பு மகள் மாயாவின் முதல் படத்தை என்னை நம்பி ஒப்படைக்கும்போது, அவர்களின் கண்களில் மகிழ்ச்சியையும், அதிக எதிர்பார்ப்பையும் பார்த்தேன்.
அவர்களின் நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன். எப்போதுமே நான் என் மனம் சொல்லும் கதைகளைத்தான் இயக்குவேன். இது தொடக்கம் ஆகட்டும் என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன்’ என்றார். ‘துடக்கம்’ என்ற படத்துக்கான டைட்டில் போஸ்டரில் தற்காப்புக்கலை குறித்த சிம்பல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இது தற்காப்புக்கலை பற்றிய படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரணவ் நடித்த முதல் படத்தில் மோகன்லால் சில காட்சிகளில் நடித்திருந்தார். அதுபோல், விஸ்மயாவின் முதல் படத்திலும் அவர் சில காட்சிகளில் நடிப்பார் என்று தெரிகிறது.