சென்னை: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதி இடையே விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் ஆர்த்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது: இத்தனை ஆண்டுகளாக என் முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது நாடு சந்தித்து வரும் நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் விவாதப்பொருள் ஆனது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது மௌனம் பலவீனம் அல்ல அது நான் பிழைப்பதற்கான முயற்சி.
ஆனால் எனது பயணம், நான் பட்ட காயங்கள் பற்றி அறியாதவர்கள் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கும்போது, நான் பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன். எனது கடந்த கால திருமண உறவுகளை யாராவது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது புகழ் பெறுவதற்கு முயற்சித்தால், அதை அனுமதிக்க மாட்டேன். என் குழந்தைகளை பொதுவெளியில் நிதி ஆதாயத்திற்காகவும் பொதுமக்களின் அனுதாபங்களை பெறுவதற்கும் பயன்படுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது. கடந்த கிறிஸ்துமஸ் அன்று நீதிமன்றம் உத்தரவிட்ட சந்திப்பைத் தவிர, என் குழந்தைகளுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
என் குழந்தைகளை பவுன்சர்களுடன் அழைத்துச் செல்வது வேதனை அளிக்கிறது. என் குழந்தைகள் கார் விபத்தில் சிக்கியதை ஒரு மாதத்திற்குப் பிறகு மூன்றாம் நபர் சொல்லி நான் தெரிந்துகொண்டேன். எனது நிபந்தனையற்ற அன்புடன், அவர்கள் பாதுகாப்பான, வளமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்புகிறேன். இது எந்தத் தந்தைக்கும் நடக்கக்கூடாது. நான் இத்தனை வருடமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்கள், பணம், சமூக ஊடக கணக்குகள், எனது திரைப்படம் சம்பந்தமான முடிவுகள் அனைத்தும் எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது தாயார் வசம் இருந்தது.
என்னை வளர்த்து ஆளாக்கிய எனது பெற்றோருக்கு கடந்த 5 வருடமாக நான் சம்பாதித்ததில் இருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. முன்னாள் மனைவியின் தாய் கடன் பெறுவதற்கு எனது சொத்தை உத்தரவாதமாக அளித்தேன், அதை ஈடு செய்ய சொல்லி 10 நாட்கள் முன்பாக என்னை வற்புறுத்துகிறார்கள். பணம், நிதி சம்பந்தமான உத்தரவாதம், கையெழுத்து தேவைப்பட்டால் மட்டுமே ரவி மோகன் அவர்களுக்கு தேவைப்படுகிறார். உன் (ஆர்த்தி) விளையாட்டை இப்போதே நிறுத்து. இனி ஒருபோதும் எனது குழந்தைகளை இதில் ஈடுபடுத்தாதே.
நான் எப்போதும் அவர்களுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பேன். உன்னை நீதிமன்றத்தில் மட்டுமே சந்திப்பேன். ஒரு நாள் இரவு எனது சொந்த வீட்டை விட்டு வெளியேறினேன். எனது பணம், வாகனம், கண்ணியம் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்காலுடன் வந்தபோது எனக்கு ஆறுதல் அளித்து அடைக்கலம் தந்தார் கெனீஷா. எனது போராட்டம் அனைத்தையும் அவர் பார்த்துள்ளார். அவர் ஒரு அழகான துணை. என் வாழ்வில் ஒளியாக வந்தவர். அதனால் அவரது கேரக்டர் அல்லது அவரது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு ரவி மோகன் கூறியுள்ளார்.