கல்லூரியில் லாஸ்லியாவை துரத்தி, துரத்தி காதலிக்கிறார் ஹரி பாஸ்கர். அவரது காதலை லாஸ்லியா ஏற்க மறுக்கிறார். அவரை விட்டு பிரிகிறார் ஹரி பாஸ்கர். இந்நிலையில், பணம் சம்பாதிப்பதற்காக ஹரி பாஸ்கர் ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் செல்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் லாஸ்லியா. மீண்டும் அவர் லாஸ்லியாவைக் காதலிக்கிறார். இதையறிந்த லாஸ்லியா, திடீரென்று ரயானுடன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு ஒப்புக்கொள்கிறார். இதனால் மனம் வெறுத்த ஹரி பாஸ்கர் என்ன செய்கிறார்? லாஸ்லியாவின் திருமணம் நடந்ததா என்பது மீதி கதை.
யூடியூப் மூலம் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவரது நடிப்பில் பல்வேறு நடிகர்களின் சாயல் தெரிகிறது. மற்றபடி காமெடி செய்கிறார், காதலிக்கிறார், கண் கலங்குகிறார். லாஸ்லியாவுக்குப் பொருத்தமான கேரக்டர் என்பதால், இயல்பாக ஸ்கோர் செய்துள்ளார். ஹரி பாஸ்கரின் தந்தையாக குணச்சித்திர கேரக்டரில் இளவரசு அசத்தியுள்ளார். வழக்கமான நண்பராக வந்தாலும், பன்ச் டயலாக்குகளில் ஷாரா கவனத்தை ஈர்க்கிறார். ரயான் உள்பட இதர கேரக்டர்களில் வரும் அனைவரும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குலோத்துங்க வர்மனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. நட்பு, காதல், காமெடி, பேமிலி சென்டிமெண்ட் என்று, ஜனரஞ்சகமான படத்தை இயக்கிய அருண் ரவிச்சந்திரன், கிளைமாக்சை சற்று மாற்றி யோசித்திருக்கலாம்.