சென்னை: தமிழ் படவுலகில் தனது பாடல்கள் மற்றும் கவிதைகளின் மூலம் தனி முத்திரையை பதித்தவர், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரது 50வது பிறந்தநாளை, மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், 8 இசை அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், ராம், லிங்கு சாமி, அஜயன் பாலா, தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர் பவா செல்லத் துரை கலந்துகொண்டு, நா.முத்துக்குமாருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். ‘ஆனந்த யாழை’ என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை ஏசிடிசி நிறுவனத்துக்காக ஹேமந்த், சரண் இணைந்து நடத்துகின்றனர்.
இதில் இசை அமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா, நிவாஸ் கே.பிரசன்னா ஆகிய 8 இசை அமைப்பாளர்கள் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்ரா உன்னி கிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் பாடுகின்றனர். சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.