ஐதராபாத்: சமந்தாவை பிரிந்த நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தாவும் இவரும் காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2021ம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். பிறகு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். சமந்தா தற்போது சிங்கிளாக இருக்கிறார்.
அதே சமயம், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. ஆனாலும் தங்களது காதலை வெளிப்படையாக இவர்கள் அறிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஐதராபாத்திலுள்ள நாகார்ஜுனாவின் பங்களாவில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சோபிதா துலிபாலா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கேரக்டரில் நடித்தார். இந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த இவர், மும்பையில் வசிக்கிறார்.