வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. உயர்சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) குடும்பத்தினர் மட்டுமே தலைவர் பதவியில் நீடித்து வருகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலையால் கீழ்சாதியை சேர்ந்த சசிகுமாரை பதவியில் அமர வைத்து அடிமையாக நடத்துகிறார். பிறகு அவரையும் ராஜினாமா செய்ய வைத்து, அதே சாதியைச் சேர்ந்த வேறொருவரை தலைவராக்க முடிவு செய்கிறார். ஆனால், மீண்டும் தலைவர் பதவிக்கு சசிகுமார் போட்டியிடுகிறார்.
பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. நீண்ட தலைமுடி, தாடி, மீசை மற்றும் வெற்றிலையால் சிவந்த வாய், அழுக்கு பனியன், எப்போதும் கும்பிடு போடும் வெள்ளந்தி குணம் கொண்ட கூழ்பானை என்ற கேரக்டரில் சசிகுமார் சிறப்பாக நடித்துள்ளார். சாதிவெறி கொண்ட பாலாஜி சக்திவேல், 100 சதவீத வெறுப்பைச் சம்பாதிப்பதே அவரது நடிப்புக்கான வெற்றி. பிடிஓ சமுத்திரக்கனி கேரக்டர் அழுத்தமானது. கொடூரமாக தாக்கப்பட்ட ஸ்ருதி பெரியசாமியின் நிலை உருக்கம் என்றால், பிறகு அவரது ருத்ரதாண்டவம் கைத்தட்ட வைக்கிறது. ஜி.எம்.குமார், துரை சுதாகர், மாதேஷ், மிதுன், சித்தன் மோகன் ஆகியோரும் அந்தந்த கேரக்டருக்குப் பொருந்தியுள்ளனர்.
நசுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வந்தாலும், மேல்சாதியினரால் அவர்களால் யாருக்கும் எந்தவொரு நல்லதும் செய்ய முடியவில்லை என்பதை சொன்ன இயக்குனர் இரா.சரவணன், கிராமத்தின் இயல்பை அப்படியே திரையில் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், காட்சிகளின் வீரியத்தைப் பின்னணி இசையால் அதிகரித்த ஜிப்ரான் வைபோதா ஆகியோருக்கு பாராட்டுகள். வசனங்கள் இன்றைய சமூகத்தைச் சாட்டையடியாக விளாசியுள்ளன. அடுத்து நடப்பதை முன்கூட்டியே கணிக்க முடிவது பலவீனம். இன்னும் எத்தனை காலம்தான் கீழ்சாதி மேல் சாதி என படம் எடுப்பார்கள் எனத் தெரியவில்லை.