வுண்டர் பார் தயாரிப்பில் தனுஷ் இயக்க பவிஷ் நாராயணன், அனிகா சுரேந்தர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
த்ரீ ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக வேலையில் இருக்கும் பிரபு ( பவிஷ் நாராயணன்) , அவருக்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கிறார்கள். ஆனால் வந்து நிற்பதோ பிரியா ( பிரியா பிரகாஷ் வாரியர்) பள்ளித் தோழி. இருவருமே நாங்கள் அப்படி பழகியதில்லை எங்களுக்கு நேரம் வேண்டும் என கேட்கிறார்கள். இதற்கிடையில் பிரபுவின் முன்னாள் காதலி நிலாவின் ( அனிகா சுரேந்திரன் ) திருமண அழைப்பிதழ் வந்து சேர உடைந்து நிற்கிறார் பிரபு. தொடர்ந்து திருமணத்திற்குப் பார்த்த பெண்ணை திருமணம் செய்தாரா இல்லை முன்னாள் காதலியுடன் இணைந்தாரா என்பது மீதிக் கதை.
பவர் பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கத்தில் அவர் நடிக்காமல் இரண்டாவது படம். போலியான நம்பிக்கைகள் கொடுக்காமல் சந்தோஷமா வாங்க சந்தோஷமா போங்க எதையும் எதிர்பார்க்காதீங்க என டிரெய்லரிலேயே தனுஷ் செய்த புத்திசாலித்தனம் படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக கை கொடுத்திருக்கிறது.
முதல் பாதி சற்றே நீளமாகவும், சில பார்த்துப் பழகிய காட்சிகளாகவும் இருந்தாலும் இரண்டாம் பாதியில் திருமணம் நண்பர்கள் உடனான கலகலப்பு, காமெடி, கலாட்டா என திரைக்கதையை நகர்த்தியிருப்பது அருமை.
பவிஷ் நாராயணன் தனுஷின் அக்கா மகன் என்பதை மறந்து, ஒரு கட்டத்தில் தனுஷ் ஆகவே மாறி நிற்கிறார். பல காட்சிகளில் அவருடைய உடல்வாகு, தோற்றம், நடிப்பு, குரல் உட்பட தனுஷை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இயக்குனர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே நடிக்கும் திறமை இருப்பது கண்கூடாக தெரிகிறது. பவிஷ்க்கு அடுத்த இடத்தில் படம் முடிந்தும் மனதில் நிற்கிறார் மேத்யூ தாமஸ். அனிகா, பிரியா வாரியர், ராபியா, ரம்யா ரங்கநாதன், இந்த கூட்டணியின் கலகல மொமெண்டகள் ரசனை. சரத்குமார் , ஆடுகளம் நரேன் இருவருமே அளவான நடிப்புடன் காட்சிகளுக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். வழக்கமான ஜாலி அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
படத்துக்கு மிகப்பெரிய பலம் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அதனுடன் பிண்ணிப் பிணைந்த விஷுவல் கொடுத்த லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு. ஏடி…, கோல்டன் ஸ்பாரோ…, பாடல்கள் பிளே லிஸ்ட் ரகம், விஷாவலாகவும் அழகு. படம் முழுக்க ஃப்ரெஷ் டோன் மற்றும் கலரிங் காண முடிந்தது. எடிட்டர் பிரசன்னா ஜி.கே முன் பாதி காட்சிகளில் உள்ள நீளத்தை குறைத்திருக்கலாம். சில க்ரிஞ்சி காட்சிகளை கூட தவிர்த்திருக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் முன்னாள் காதல் , காதலி, காதலன் இருப்பின் வரும் துணைக்கு சொல்லி விடுங்கள், அதை பெரிதாக்காமல் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு முன்னால் காதல் நிச்சயம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு கடந்து செல்லுங்கள் என்பதை மிக அழகாக எடுத்து வைத்திருக்கிறது இப்படம்.
மொத்தத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் எனக்கு எந்த திருப்புமுனையோ, திரில் ,திகில் காட்சிகளோ, தேவையற்ற ஆக்ஷன் அதிரடி எல்லாம் வேண்டாம். லேசான ஒரு மனநிலையில் ஒரு கதை வேண்டும் என்போர் இப்படம் பார்க்கலாம்.