சென்னை: தமிழில் ‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’, ‘யட்சன்’, தெலுங்கில் ‘பாஞ்சா’, இந்தியில் ‘ஷெர்ஷா’ ஆகிய படங்களை இயக்கியவர், விஷ்ணுவர்தன். அடுத்து இந்தியில் சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்நிலையில், அவர் தமிழில் இயக்கியுள்ள படத்துக்கு ‘நேசிப்பாயா: லவ் மீ, லவ் மீ நாட்!’ என்று பெயரிட்டுள்ளார். இதில், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் ேஜாடி சேர்ந்துள்ளனர். அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ் முரளி, ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற ரீமேக் படத்தை இயக்கிய சினேகா பிரிட்டோவின் கணவர்.
படம் குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், ‘ஆகாஷ் அதிக திறமை கொண்ட நடிகர். அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். இப்படம் சாகச காதல் கதையுடன் உருவாகியுள்ளது. காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், காதலிக்க போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் படம் நகரும்’ என்றார். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். சினேகா பிரிட்டோ இணை தயாரிப்பு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஷ்ணுவர்தன், நீலன் சேகர் திரைக்கதை எழுதியுள்ளனர். கேமரூன் எரிக் பிரைசன், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பா.விஜய், ஆதேஷ் கிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளனர்.