அதிக எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள வரலாற்று அதிரடி படைப்பான ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பான் இந்தியா படத்தில், ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், முன்னணி நடிகருமான பவன் கல்யாண் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.தயாகர் ராவ் தயாரிக்க, எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். 16ம் நூற்றாண்டு முகலாயர்கள் காலக்கட்டத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மண்ணின் வீரம் நிரம்பிய ஒரு கதையை பதிவு செய்கிறது. துணிச்சலும், புரட்சியும் கொண்ட மாறுபட்ட கேரக்டரில் தோன்றும் பவன் கல்யாண், நடிப்பில் தனி முத்திரையை பதித்திருக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க, முகலாய பேரரசராக பாபி தியோல் நடித்துள்ளார்.
மற்றும் சத்யராஜ், தலைவாசல் விஜய், நாசர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, வி.எஸ்.ஞானசேகர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். தோட்டா தரணி மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்துள்ளார். பல வருடங்களாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது உறுதியான தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் ஜூலை 24ம் தேதி இப்படம் பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. இப்போதாவது இப்படத்துக்கு ஒரு விமோசனம் கிடைத்ததே என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.