சென்னை: கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தீபாவளியை முன்னிட்டு வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:1975களில் நடக்கும் கதை இது. பீரியட் பிலிம் என்பதால் எனது நடை, உடை, பாவனை, நடிப்பு எல்லாம் அந்த காலக்கட்டத்தை நினைவுபடுத்தும். ‘நினைத்தாலே இனிக்கும்’ ரஜினிகாந்த், கமல்ஹாசன் மாதிரி என்று சொல்லலாம். அவர்களின் நடிப்பையோ, ஸ்டைலையோ நான் மேற்கொள்ளவில்லை. படத்தின் கேப்டன் கார்த்திக் சுப்பராஜ் சொன்னதை மட்டுமே நானும், எஸ்.ஜே.சூர்யாவும் செய்தோம். கதையைக் கேட்டு முடிவு செய்துவிட்டால், ஷூட்டிங்கில் எந்த இயக்குனரின் வேலையிலும் நான் தலையிட மாட்டேன்.
காரணம், ஒவ்வொரு இயக்குனரும் தங்கள் கற்பனையில் ஒவ்வொரு கேரக்டரையும் படைக்கின்றனர். எனவே, அந்த இயக்குனர் சொன்னபடி நடிப்பேன். எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன். நடனம் எனது மிகப்பெரிய அடையாளம் எனினும், இப்படத்தில் ஆதிவாசியாக நடிப்பதால், எங்கேயும் அந்த சாயல் தெரியக்கூடாது என்பதில் நான் கவனத்துடன் இருந்தேன். கிளைமாக்சில் எனக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடிப்பில் மிகப்பெரிய பிரளயம் ஒன்று ஏற்பட்ட மாதிரி இருக்கும். அவருக்கோ, எனக்கோ விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். விருதுகளில் எனக்கு ஆர்வம் கிடையாது. மக்களின் கைத்தட்டலே போதும். ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு மட்டும்தான் என்னை இன்றளவும் வழிநடத்தி செல்கிறது.
எனது ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். ஒரு நிமிடம் ஏமாந்தால் போதும், நடிப்பில் அப்படியே நம்மை தூக்கிச் சாப்பிட்டு விடுவார். எனவே, அவருடன் நடிக்கும்போது பயமாக இருந்தது. எனவே, ரொம்ப உஷாராக இருந்தேன். இதுவரை தீபாவளிக்கு எனது படங்கள் ரிலீசானது இல்லை. எனவே, இதுதான் எனக்கு தலைதீபாவளி. இதையடுத்து என் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்கும் ‘புல்லட்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டில் ‘முனி 5: காஞ்சனா 4’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறேன். பேய் படங்களுக்கு மட்டுமே லாரன்ஸ் லாயக்கு என்று சொல்பவர்களுக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் சரியான பதிலடி கொடுக்கும். இதுவரை நடித்ததில், அதாவது எனது திரைப்பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.