Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பலாத்கார புகார்: நிவின் பாலி விடுவிப்பு

திருவனந்தபுரம்: சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் கடந்த வருடம் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் துபாயிலுள்ள ஓட்டலில் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஊன்னுகல் போலீசில் புகார் செய்தார். பலாத்காரம் செய்ததோடு அதை செல்போனில் பதிவு செய்தும் மிரட்டியதாக அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிவின் பாலி 6வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

போலீசில் இளம்பெண் புகார் செய்த அன்றே பத்திரிகையாளர்களை சந்தித்த நிவின் பாலி, தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும், புகார் கூறிய இளம்பெண்ணை பார்த்ததே இல்லை என்றும், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார். இதற்கிடையே பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய கடந்த வருடம் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நிவின் பாலி தன்னுடைய படத்தின் படப்பிடிப்பில் இருந்ததாக பிரபல டைரக்டர் வினித் னிவாசன் கூறினார்.

இந்நிலையில் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய எர்ணாகுளம் டிஎஸ்பி வர்கீஸ், நேற்று கோதமங்கலம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது: பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் நடிகர் நிவின் பாலி துபாய் செல்லவில்லை. அதற்கான ஆவணங்களை அவர் தாக்கல் செய்துள்ளார். அது உண்மை என உறுதியாகி உள்ளது. புகார் தொடர்பாக அவருக்கு எதிராக எந்த ஆவணமும் இல்லை. எனவே நடிகர் நிவின் பாலி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.