சென்னை: சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிஷா வெளியிட்ட பதிவில், ‘மன்சூர் அலிகான் மனித குலத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டார்’ என்று கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து மாளவிகா மோகனன், குஷ்பு, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இந்த கீழ்செயல் காரணமாக தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும்வரை மன்சூர் அலிகானை சங்கத்தில் இருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது’ என தெரிவித்து இருந்தது.
இந்த பிரச்னைக்கு விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், இது அரசியல் சதி என கூறியிருந்தார். ஆனால் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை. இது மேலும் பல தரப்பினரும் மன்சூர் அலிகான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்காதது ஏற்க முடியாது என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதனால் அவருக்கு புது பட வாய்ப்புகளுக்காக யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கமும் தடை விதிக்கும் என கூறப்படுகிறது.
நடிகைரோஜா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘மன்சூர் அலிகான் போன்றவர்கள் பேசும் முறையை மாற்றி கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திரிஷா, குஷ்பு மற்றும் என்னை பற்றி தவறாக பேசிய மன்சூர் அலிகான் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதுபோன்றவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பயப்படாமல் பேசுவார்கள். பெண்களை இழிவாக பேசும் ஆண்களை பெற்ற தாயும் பெண் என்பதை சிந்தித்தால் இந்த நிலை மாறும்” என்று தெரிவித்துள்ளார்.