கார்த்தி நடித்துள்ள 25வது படம், ‘ஜப்பான்’. வரும் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தை ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து கார்த்தி கூறுகையில், ‘ஒரு கிரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால், இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் ஆழமாகப் பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. துணிச்சலான, உற்சாகமான, ஆர்ப்பாட்டங்களே இல்லாத என் கதாபாத்திரமும், இயக்குனர் ராஜூ முருகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் என்னை இப்படத்துக்குள் இழுத்து வந்தது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய அவரது முந்தைய படங்களை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். இந்த சமூகம், இங்குள்ள கலாசாரம் குறித்த அவரது புரிதல் மிகவும் போற்றுதலுக்குரியது. சர்வதேச அளவிலான பார்வையாளர்களைக் கவரும் விதமான சாத்தியம் ‘ஜப்பான்’ படத்துக்கு இருக்கிறது. அதனால்தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் வரவேண்டும் என்று நான் விரும்பினேன். அவரது வித்தியாசமான கோணங்களும், பார்வைகளும் இப்படத்தை மாற்றும் என்று நாங்கள் நம்பியதைப் போலவே இப்போது எங்கள் படக்குழுவினர் சாதித்துள்ளோம். பக்காவான உள்ளூர் சுவையில், அதேவேளையில் உலகத்தரத்தில் இப்படத்தை நாங்கள் ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
திரையுலகில் சகோதரர்கள் ஒரே காலக்கட்டத்தில் நடிகர்களாகப் பயணித்து வருவது என்பது அரிதான ஒன்று. அதனால், அண்ணன் சூர்யாவுடன் எப்போது ஒரே படத்தில் இணைந்து நடிக்கப் போகிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். நானும், அண்ணனும் இணைந்து நடிப்பதற்கான மிகப் பொருத்தமான கதைகளை தற்போது இருவரும் கேட்டு வருகிறோம். முன்பு நான் பெரிதும் பயந்தேன். இப்போது நான் பயப்படவில்லை. ஆனால், மன உறுதியுடன் இருக்கிறேன். எனவே, நிச்சயமாக நானும், சூர்யாவும் இணைந்து நடிப்போம். ‘ஜப்பான்’ படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி இயக்கத்தில் பேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகும் புதிய படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்து நான், ‘96’ படத்தின் இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கிறேன்’ என்றார்.