சென்னை: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு, ரமா நடித்திருந்த படம், ‘பார்க்கிங்’. இதை ‘பலூன்’ இயக்குனர் கே.எஸ்.சினிஷ் சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் தயாரிக்க, பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது. வீடுகளில் நடக்கும் பார்க்கிங் பிரச்னை குறித்து பேசிய இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராம்குமாருக்கு ஹரீஷ் கல்யாண் தங்கக்காப்பு ஒன்றை பரிசளித்தார். இந்நிலையில் ‘பார்க்கிங்’ படத்துக்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்படத்தின் திரைக்கதை அடங்கிய நூல், ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள ஹரீஷ் கல்யாண், ‘ஒரு நல்ல கதை, அதற்கான இடத்தை தானாகவே தேடிச்செல்லும்’ என்று கூறியுள்ளார்.