பாலிவுட் மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர், சோனாக்ஷி சின்ஹா. 2010ல் ‘தபாங்’ என்ற படத்தில் சல்மான்கான் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரவுடி ரத்தோர்’, ‘ஜோக்கர்’, ‘சன் ஆஃப் சர்தார்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள ‘நிகிதா ராய்’ என்ற திகில் படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘முன்னதாக எனக்கு பேய் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால், திடீரென்று ஒருநாள் என் சொந்த வீட்டில் ஒரு திகில் சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் என்னை உலுக்கியெடுத்து விட்டது. ஒருநாள் அதிகாலை 4 மணிக்கு படுக்கை அறையில் நன்றாக தூங்கியபோது, அங்கு யாரோ இருப்பது போல் உணர்ந்தேன்.
அப்போது நான் தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையிலான நிலையில் இருந்தேன். திடீரென்று யாரோ என்னை எழுப்புவது போல் இருந்தது. என் மீது யாரோ உட்கார்ந்து அழுத்தியது போல் உணர்ந்தேன். என்னால் அப்படி, இப்படி அசையக்கூட முடியவில்லை. உடல் முழுவதும் நடுக்கம் ஏற்பட்ட பயத்தில் கண்களை நான் திறக்கவே இல்லை. காலையில் எழுந்திருக்கும் வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு மீண்டும் அடுத்த நாள் தூங்கச் செல்வதற்கு முன்பு, நேற்று இரவு யார் வந்திருந்தாலும் சரி, இனி அதுபோல் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வேண்டிக்கொண்டு தைரியமாக தூங்கினேன். இதற்கு பிறகு அதுபோன்ற அமானுஷ்ய சம்பவம் எனக்கு நடக்கவில்லை’ என்றார்.