மும்பை: இந்தியில் ‘காக்டெயில்’, படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டயானா பென்டி. அப்படத்தை தொடர்ந்து ‘லக்னோ சென்ட்ரல்’, ‘ஷிதாத்’, ‘செல்ஃபி’, ‘சாவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சல்யூட்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தனது இளமை பொங்கும் நடிப்பால் பல ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார்.
அந்தவகையில் தற்போது தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி டயானா பென்டி கூறும்போது, ‘‘மும்பையில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருப்பார்கள். இது நிதர்சனமான உண்மை. அப்படி ஒரு சம்பவம் எனக்கும் நடந்துள்ளது. நான் கல்லூரிக்கு செல்லும்போது மும்பை மின்சார ரயிலில் தான் பயணிப்பேன்.
அப்படி செல்லும்போது சில ஆண்கள் முழங்கைகளால் என் உடலை தொடுவார்கள். என்னை கேலி செய்து சிரித்து பேசுவார்கள். பிறகு இது தினமும் நடக்கும் நிகழ்வாகவே மாறிவிட்டது. இவர்களை போன்ற கயவர்களை எதிர்த்து, திருப்பி அடிக்கும் தன்னம்பிக்கை எனக்கு அப்போது இல்லை. பஸ்களில், ரெயில்களில் பயணிக்கும்போது நான் பல அத்துமீறல்களை அனுபவித்துள்ளேன். இதுபோல் பெண்களை தொடுபவர்களுக்கு தக்க தண்டனை தர வேண்டும்’’ என்றார்.