அஜித் குமார், திரிஷா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். கர்ப்பம் கலைந்ததாலும், வேறொருவருடன் நெருக்கம் இருப்பதாலும், பல வருடங்களுக்குப் பிறகு அஜித் குமாரை விவாகரத்து செய்ய முயற்சிக்கும் திரிஷா, அஜர்பைஜான் பாலைவனத்துக்கு நடுவே காரில் பயணிக்கிறார். அப்போது ஆரவ் கார் மீது அஜித் குமாரின் கார் மோதுகிறது. இதனால் அவர்களிடையே சண்டையும், பிறகு சமாதானமும் ஏற்படுகிறது. இதையடுத்து மீண்டும் பயணிக்கும்போது அஜித் குமாரின் கார் நின்றுவிடுகிறது. அப்போது எதிர் டிராக்கில் அர்ஜூன், ரெஜினா இருவரும் பெரிய டிரக்கில் வருகின்றனர்.
அவர்கள் இவர்களுக்கு உதவ முன்வர, திரிஷாவை அர்ஜூன் வாகனத்தில் அஜித் குமார் அனுப்பி வைக்கிறார். பிறகு கார் ஸ்டார்ட் ஆகிறது. திரிஷாவைத் தேடி அஜித் குமார் செல்கிறார். ஆனால், திரிஷா மாயமாகிறார். அவரை அர்ஜூன் கடத்தவில்லை என்று சொல்ல, தனது மனைவியைக் கண்டுபிடிக்கும்படி போலீசில் அஜித் குமார் புகார் கொடுக்கிறார். போலீஸ் விசாரணையில் அதிரடி தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் திரிஷாவை அஜித் குமார் கண்டுபிடித்தாரா? அர்ஜூன், ரெஜினா, ஆரவ் ஆகியோருக்கு இடையே என்ன தொடர்பு என்பது மீதி கதை.
‘சவதீகா’ பாடலில் உற்சாகமாக நடனமாடி ரசிகர்களைக் கவரும் அஜித் குமார், திரிஷாவின் விவாகரத்தை அறிந்து கலங்குவது உருக்கம். திரிஷாவை மர்ம நபர் கடத்திய பிறகு அஜர்பைஜானி மொழி தெரியாமல் சிரமப்படும் அஜித் குமார், மனைவியைக் கண்டுபிடிக்கும்போது சந்திக்கும் பிரச்னைகளின் மூலம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத அவர், சண்டைக் காட்சிகளில் தனது உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளார். கார் சேசிங் காட்சியில் அவருடன் சேர்ந்து ஆரவ் அசத்தியுள்ளார். அஜித் குமாருடன் அடிக்கடி மோதி ரசிகர்களிடம் திட்டு வாங்குகிறார். வலிமையான வில்லனாக அர்ஜூனும், அவரது காதலியாக ரெஜினாவும் நடிப்பில் குறை வைக்கவில்லை. திரிஷா அழகாக இருக்கிறார். கடத்தப்பட்ட பிறகு அவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி.
ரவி ராகவேந்திரா, ரம்யா சுப்பிரமணியன், அஜர்பைஜான் நடிகர்கள் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். பன்ச் டயலாக் மற்றும் காமெடி கிடையாது. அஜித் குமாரை புதிய கோணத்தில் காட்ட நினைத்த இயக்குனர் மகிழ் திருமேனி, அந்த விஷயத்தில் வெற்றிபெற்றுள்ளார். அழகான அஜர்பைஜானையும், பாலைவன வறட்சியையும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். மாஸ் ஹீரோவை திரையில் காட்டாமல் துணிச்சலாக முடிவெடுத்த இயக்குனரும், அஜித் குமாரும் பிற்பகுதியில் செலுத்திய கவனத்தை முற்பகுதியிலும் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. என்றாலும், அஜித் குமார் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும்.