சென்னை: தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்வது சமந்தாவின் வழக்கம். அதன்படி நேற்று அவர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அவர் வெளியே வந்தபோது திடீரென்று சூழ்ந்துகொண்ட ரசிகர்கள், அவருடன் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முயன்றனர். அந்த நேரத்தில் தனதுசெல்போனில் பேசிக்கொண்டிருந்த சமந்தாவுக்கு ரசிகர்களின் இதுபோன்ற செயல் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த அவர், ‘ஸ்டாப் இட் கய்ஸ்’ என்று கத்தினார். பிறகு வேகமாக நடந்து சென்று காருக்குள் தனியாக அமர்ந்துகொண்டார்.
இணையதளங்களில் வைரலான அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும், ‘சமந்தா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்? ஜிம்மில் அவருக்கு ஏதாவது அசவுகரியத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்ததா? அல்லது வெளியே அவரை வீடியோ எடுக்க பின்தொடர்ந்து சென்றது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், ‘சமந்தா யாரிடமோ போனில் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரை தொந்தரவு செய்வது போல் நடந்துகொண்டால், இப்படி கோபம் வரத்தானே செய்யும்?’ என்று, சமந்தா வுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.