இயக்குநர் ராஜு சந்திரா இயக்கத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி , நீலா கருணாகரன், சுல்பியா, மஜீத் , இன்பரசு, பக்தவல்சலன், அமித் மாதவன், விபின் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அப்புகுட்டி வேலைவெட்டிக்கு போவதில் ஆர்வம் காட்டாமல், குடித்துவிட்டு போதையில் மிதப்பதையே முழுநேர வேலையாகச் செய்கிறார். ஒருநாள் அப்படி குடித்துவிட்டு வந்து படுத்தவர் தூக்கத்திலேயே இறந்துபோகிறார். ஊர் கூடிவிடுகிறது; எரிப்பதா, புதைப்பதா என்பதையெல்லாம் பேசி முடிவு செய்து அதற்கான வேலைகள் பரபரப்பாக தொடங்குகிறது. முடிவு என்பது மீதிக் கதை.
இறந்துபோன அன்பு, ‘நான் இறக்கவில்லை; உயிருடன்தான் இருக்கிறேன்’ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே அவனை எரிப்பதற்கு அந்த ஊரும் உறவும் தயாராகிறது என்பதுதான் படத்திலிருக்கிற சுவாரஸ்யம். அன்புவின் மரணம் குடியால் நிகழ்ந்ததா? கொலையா? என்ற கேள்வி உருவாகும்படி ஒருசில காட்சிகளை இணைத்திருப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ‘உண்மையில் அன்புக்கு நடந்தது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கிளைமாக்ஸில் கிடைக்கிறது. அந்த கிளைமாக்ஸ் யூகிக்க முடியாததாக, எதிர்பாராததாக இருக்கிறது.
வேலை வெட்டி, குடும்பம் குட்டி என எதைப் பற்றியும் சிந்திக்காமல், எந்த நேரமும் போதையேற்றிக் கொண்டு திரிகிற ஆசாமியாக அப்புகுட்டி. குடிப்பதற்காக யாரிடம் வேண்டுமானாலும் பணம் வாங்கும் மனநிலையில் இருப்பது, குடிப்பதற்காக பாட்டியிடம் பணம் பிடுங்குவது, சாப்பாடு போட்டுவைத்த தட்டில் தலைக்கேறிய போதையோடு சரிந்து விழுவது என நீளும் காட்சிகளில் குடி நோயாளிகளின் ஜெராக்ஸ் காப்பியாக மாறியிருக்கிறார். ‘நான் இறக்கவில்லை நான் இறக்கவில்லை’ என தான் கத்துவதை தன்னைச் சுற்றியிருப்பவர்களில் ஒருவராவது கேட்க மாட்டார்களா, எரிக்காமல் புதைக்காமல் காப்பாற்ற மாட்டார்களா என்ற உணர்வை வெளிப்படுத்துகிற அவரது உடல்மொழி ரசிக்க வைக்கிறது.
தன்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேச, ‘மூக்குல வெச்ச பஞ்சை காதுல வெச்சிருக்கலாம்’ என பிணக்கோலத்தில் புலம்பும்போது தியேட்டரில் சிரிப்புச் சத்தம் அதிகரிக்கிறது. அப்புகுட்டியின் மனைவியாக ஐஸ்வர்யா அனில்குமார். கர்ப்பிணியாக வருகிற அவர், குடிக்கு அடிமையான கணவரை வைத்துக்கொண்டு அவதிப்படும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார். எத்தனை அவதிப்பட்டாலும் கணவர் மீதான பாசத்தைக் குறைத்துக் கொள்ளாதிருப்பது நெகிழ வைக்கிறது.
விவசாய நிலத்தை அழித்து சமூகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் தொழில் தொடங்க திட்டமிடுபவராக, அதற்கு தடையாக ‘விவசாய நிலத்தில் விவசாயத்தை தவிர எதையும் செய்ய அனுமதிக்க மாட்டேன்’ என பிடிவாதமாக இருக்கிற தன் அப்பாவை கொல்லவும் துணிபவராக முறுக்கு மீசையுடன் கெத்தாக வலம் வருகிறார் (இந்த படத்தின் தயாரிப்பாளர்) ரோஜி மேத்யூ.
கதைநாயகனின் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிற சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, லீலாவதி கருணாகரன், விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு உள்ளிட்டோரின் பங்களிப்பில் குறையில்லை. கதைக்களத்திற்கு பொருத்தமான ‘ஊத்த ஊத்த ஊறுகாய சேத்த’ பாடலின் இசையில் உற்சாகத்தை நிரப்பியிருக்கிற இசையமைப்பாளர்கள் ஜி கே வி, நவ்னீத் கூட்டணி, நீயா இது நீயேதானா?’ பாடலுக்கு தந்திருக்கும் இசை மனதுக்கு இதம் தருகிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
படத்தை இயக்கியிருப்பவரே ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். பொள்ளாச்சியின் பசுமையை, எளிய குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தின் அழகை எளிமையான படஜெட்டில் அடக்கியிருக்கிறார். குடிகாரர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்துகிற பல படங்களை பார்த்துள்ள நமக்கு, அப்படிப்பட்ட குடிகாரன் இறந்துபோவது, இறந்தபின் அவனைப் பற்றி மற்றவர்கள் என்னென்ன பேசுகிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள், தன் மனைவியை எப்படி பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் அவனே பார்த்து அனுபவிப்பதுபோல் இயக்குநர் ராஜு சந்ரா அமைத்திருக்கும் திரைக்கதையில் காமெடியும் இருக்கிறது.
குடியின் தீமைகளை எடுத்துச் சொல்கிற எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. ஆனாலும் நடக்கும் பிரச்னைகளுக்கு வாரம் ஒரு படம் வந்தாலும் போதாது என்கிற நிலையில் ‘ பிறந்தநாள் வாழ்த்துகள் ‘ படமும் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது .