சென்னை: இசை அமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 25வது படம், ‘கிங்ஸ்டன்’. இதன் டைட்டில் லுக்கை கமல்ஹாசன் வெளியிட்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கமல் பிரகாஷ் எழுதி இயக்கும் இதில், ‘பேச்சிலர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். தவிர ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ‘கல்லூரி’ வினோத், சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் சபுமோன் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். கடல் பின்னணியில் ஹாரர் அட்வென்ச்சர் ஜானரில் உருவாக்கப்படும் இப்படத்துக்கு தீவிக் வசனம் எழுதுகிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக தினேஷ் குணா, நிர்வாக தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகம் பணிபுரிகின்றனர். படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், ‘இப்படத்தின் கதையைக் கேட்டவுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கும் என்று பலத்த நம்பிக்கை ஏற்பட்டது. எனவே, நானே தயாரிக்க முடிவு செய்தேன். கமல்ஹாசன் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தினருக்கு நன்றி. தயாரிப்பாளராக நான் வெற்றிபெற ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
54