ஐதராபாத்: நாக் அஸ்வின் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் படம், ‘புராஜெக்ட் கே’. இதில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கின்றனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக, பட நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் கமல்ஹாசன் வில்லன் வேடம் ஏற்கிறார் என்றும், அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.இப்படம் குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தபோது, தயாரிப்புத்துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம். நம் அடுத்த தலைமுறையை சேர்ந்த ஒரு சிறந்த இயக்கு னர் இதில் தலைமை வகிக்கிறார். எனது சக நடிகர்களான பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகிய இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடிக்கின்றனர்.
இதற்கு முன்பு அமித்ஜி யுடன் (அமிதாப் பச்சன்) இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்றாலும், ஒவ்வொரு முறையும் நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல்முறை போலவே உணர்கிறேன். இப்போதும் கூட அமித்ஜி ஒவ்வொரு படத்திலும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அவரது பாதையைத்தான் நானும் பின்பற்றுகிறேன். ’புராஜெக்ட் கே’ படத்தில் பணியாற்ற மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.திரையுலகில் எந்தவொரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என் முதன்மையான தன்மை, நான் திரைப்பட ஆர்வலன் என்பதே. அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். ’புராஜெக்ட் கே’ படத்துக்கு இது என் முதல் கைத்தட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குனர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா உலகிலும் கைத்தட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.